×

‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என ரூ.20,000 கோடி மோசடி மை வி3 ஆட்ஸ் நிறுவன சொத்து முடக்கப்படுமா?: வழக்கில் இருந்து தப்பிக்க பலே திட்டம் போடும் உரிமையாளர்

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு மை வி3 ஆட்ஸ் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டிற்கு முன் இந்த நிறுவனத்தை நெல்லை மாவட்டம் ஏனாந்தாள் சேர்ந்த விஜயராகவன் (43). இவரது சகோதரி குமாரி, உறவினர் சிவசங்கர் ஆகியோர் நடத்தி வந்தனர். விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனம் முதலீடுகளாக பெற்றுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டிற்கு பிறகு அதில் இயக்குனராக பணியாற்றி வந்த கோவை பீளமேட்டை சேர்ந்த சத்தி ஆனந்தன் (36) என்பவர் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தை வழி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த முதலீட்டாளர்களின் மூலமாக ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் டெபாசிட் ஆக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடு குறித்து பல புகார்கள் கோவை குற்றப்பிரிவு போலீசில் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மோசடிகளை நடத்தியிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சத்தி ஆனந்தனை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முதலீடு மோசடி விவகாரத்தில் கைதாகி விடும் சூழல் இருப்பதை அறிந்து அதில் தப்பிக்க முன் கூட்டியே போலீசாரால் கைது செய்யப்படவேண்டும் என நாடகமாடி அதற்கேற்ப அவர் செயல்பட்டு கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைவி3 ஆட்ஸ் முதலீட்டு தொகையில் 70 சதவீதம் விஜயராகவனிடம் இருப்பதாக தெரிகிறது. இவற்றை தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், விவசாய நிலம், வாகனங்கள், பங்கு சந்தை என பல்வேறு தொழில்களில் இவர் முதலீடு செய்திருக்கலாம் என்றும், நிறுவனம், அறக்கட்டளை பெயரில் சொத்துக்கள் இருக்கலாம் என்றும், பினாமியாக அரசியல், தொழில் துறையினர் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த சொத்துக்கள் முடக்கப்படலாம் என தெரிகிறது. விஜயராகவன் இந்த வழக்கில் இல்லை என்பது போல் காட்டி ஏமாற்றும் முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து அவர் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தை மறைமுகமாக இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தி ஆனந்தன், அவருக்கு பின் அவரின் சகோதரர் ரவிக்குமார் உட்பட 16 பேர் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

 

The post ‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என ரூ.20,000 கோடி மோசடி மை வி3 ஆட்ஸ் நிறுவன சொத்து முடக்கப்படுமா?: வழக்கில் இருந்து தப்பிக்க பலே திட்டம் போடும் உரிமையாளர் appeared first on Dinakaran.

Tags : My V3 ,Coimbatore ,My V3 Ads ,Vijayaraghavan ,Enanthal, Nellai district ,Kumari ,Sivasankar ,Dinakaran ,
× RELATED கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள்...